மோடி அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை

கருப்பு பணம் மீட்பு உள்பட மோடி அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தியதால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்கள் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கணிசமான நன்மைகளை பெறவில்லை எனவும், விவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவு என அனைத்து துறைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துவிட்டது எனவும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என கேள்வி எழுப்பிய மன்மோகன்சிங்,  வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மீட்கப்படும் என இந்த அரசு அளித்த வாக்குறுதி தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார். பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்ற மோடி அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது என மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Related Posts