மோடி மேஜையை தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது- வைகோ

மாநிலங்களவையில் தான் பேசும் போது பிரதமர் மோடி மேஜையை தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 25-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்ட வைகோ சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்த உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாநிலங்களவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும்  தன்னை வரவேற்றதாக தெரிவித்தார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், அதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். பிரதமர் மோடியை   எவ்வளவுதான் விமர்சித்திருந்தாலும் தான் பேசும்போது அவர் மேஜையை தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக வைகோ தெரிவித்தார். அப்துல்கலாம் நினைவு நாள் குறித்து கருத்து தெரிவித்த வைகோ, எதிரி அடிக்கும்போது தாங்கிக்கொண்டே இருந்து, வாய்ப்பு கிடைக்கும்போது திருப்பி அடிக்க வேண்டும் என அப்துல் கலாம் கூறியதை தான் பின்பற்றுவதாக குறிப்பிட்டார்.

பின்னர் அண்ணா நகரில் உள்ள தமது இல்லத்திற்குச் சென்ற வைகோ அங்கு அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

 

Related Posts