மோடி வருகைக்கு எதிர்ப்பு: விமான நிலையத்தை முற்றுகையிட்ட பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது

 

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் கருப்புக் கொடிகளுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஏப்ரல்-12

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை எதிர்த்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையினர் சார்பில் இன்று காலை விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.அப்போது பாரதிராஜா கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். மக்கள் கோரிக்கைக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே ஆலந்தூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். கருப்பு சட்டை அணிந்திருந்த தொண்டர்கள் “மோடியே திரும்பி போ” என்று கோ‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட அங்கிருந்து புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள் நூற்றுக்கணக்கான கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு மண்டபங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.

Related Posts