மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பு: திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன்

 

 

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் வீட்டு மாடியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராட்சத பலூன் தொங்க விடப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல்-12 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் கண்டன பேரணி, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து வருகிறது. அரசியல் கட்சியினர் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடியை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சென்னையில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டு உள்ளது. MODI GO BACK என்ற வாசகம் அடங்கிய பலூனை பறக்கவிட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் கருப்புக்கொடி காட்டியும், பலூன்கள் பறக்கவிட்டும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டது. மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள், ஒட்டுநர்கள் 300க்கு மேற்பட்டோர் கறுப்பு சட்டை அணிந்தும், கறுப்பு கொடி ஏந்தியும், லாரிகளில் கறுப்பு கொடியினை கட்டியும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். 

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

Related Posts