யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹாவை சந்தித்தார் வைகோ

 

 

சென்னை வந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா ஆகியோரை ஆட்டோவில் சென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.  

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் காஞ்சிபுரத்தில் நாளை 35 ஆவது வணிகர்தின மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்கா பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள அவர்களை சந்திக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டமிட்டிருந்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் இருந்து வைகோ இன்று பிற்பகல் புறப்பட தயாராக இருந்தபோது அவரது ஓட்டுனர் மதிய உணவுக்கு வெளியே சென்றிருந்தார்.

ஓட்டுனர் வர தாமதமானதால், வைகோ தமது உதவியாளர் பிரசாத்துடன் அண்ணாநகரில் இருந்து கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதிக்கு ஆட்டோவில் சென்றார். அங்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்கா ஆகியோரை சந்தித்து பேசினார்.மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை இன்று சந்தித்தார்.அப்போது தமது மகன் திருமணவிழாவில் பங்கேறக வருமாறு அழைப்பிதழை வைகோவிடம் மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.

Related Posts