யானை தாக்கியதில் லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

கோவை அருகே யானை தாக்கியதில் லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஆனைகட்டி, மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் குடிநீருக்காக குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் பன்னிமடை பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. அப்போது சஞ்சீவி நகரை சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கு சுற்றி திரிந்துகொண்டிருந்த யானை கணேசனை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Posts