யூரியா உர தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ

தமிழ்நாட்டில் யூரியா உர தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய – மாநில அரசுகளுக்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்த விவசாயிகள் குறை தீர்வுக் கூட்டங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது என்று விவசாயிகள் கூறியதை அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆண்டுக்கு ஐந்து லட்சத்து 50 ஆயிரம் டன் யூரியா உரம் தமிழகத்திற்குத் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இயங்கி வரும் ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளில் உற்பத்தி நின்று போனதால், யூரியா உரத்திற்கு கூட்டுறவு வேளாண் மையங்களையே விவசாயிகள் நம்பி இருப்பதாக வைகோ கூறியுள்ளார். அங்கும் போதுமான அளவு யூரியா விநியோகிக்கப்படாததால், தனியார் விற்பனை நிலையங்களை விவசாயிகள் நாடுவதாக அவர் தெரிவித்துள்ளார். 45 கிலோ யூரியா அதிகபட்சமாக 266 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து உர நிலையங்களிலும், இருப்பு, விலைப்பட்டியலை வைக்க வேண்டும் என்ற வேளாண்துறை அறிவுறுத்தலை, உர விற்பனையாளர்கள் செயல்படுத்துவது இல்லை என்று அவர் கூறியுள்ளார். தற்போது பருவ மழை பெய்ததால் தென் மாநிலங்களிலும் யூரியா பயன்பாடு அதிகரித்து, தமிழ்நாட்டிற்கு தேவைக்கு ஏற்ப யூரிய உரம் கிடைக்கவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். இதனால் யூரியா விலையை 50 முதல் 70 ரூபாய் வரை கூடுதலாகக் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். உர விற்பனையாளர்கள் யூரியா விலையை அதிகரித்து விற்பதைத் தடுக்க, வேளாண்துறை மூலம் கண்காணிப்பதோடு, தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி யூரியா கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கூடுதலாக உரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள வைகோ, தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப யூரியா உரங்கள் கிடைக்க மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Related Posts