ரபேல் சீராய்வு மனுக்கள் விசாரணை  மத்திய அரசு வருகிற 4ம் தேதி பதிலளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

விமானப்படைக்கு பிரான்சிடம் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில், முறைகேடு நடந்ததற்கு ஆதாரமாக பாதுகாப்பு துறையின் சில ஆவணங்கள் ஊடகத்தில் வெளியாயின. இவற்றை ஆதாரமாக வைத்து, ரபேல் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுத் தாக்கல் செய்தனர்.பாதுகாப்பு துறையின் ஆவணங்கள் திருடப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை ஆதாரமாக ஏற்கக் கூடாது என மத்திய அரசு கூறியது.  இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரங்கள் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும்- வரும் 4ம் தேதி சனியன்று பதில் மனுவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். .

 

Related Posts