ரபேல் – ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம்

 

ரபேல் போர் விமான முறைகேடு ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்து ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார்.

 

இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தம் பாஜக ஆட்சியில் போடப்பட்டது.

அதிக தொகை கொடுத்து விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேலும் ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக ரபேல் ஒப்பந்தத்தை மத்திய அரசு மாற்றி அமைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.  இந்நிலையில், தன் மீதான ராகுல் கந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன்னை தனிப்பட்ட முறையில் ராகுல்காந்தி தாக்கி பேசியிருப்பது வருத்தம் அளிப்பதாகவும்,  ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றது எனவும் கூறியுள்ளார்.

தீங்கு இழைக்கும் நோக்கத்தில் கார்பரேட் நிறுவன போட்டியாளர்கள் சிலர் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு, தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இடையே ரபேல் விமான தயாரிப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரபேல் விமானத்தில் இருக்கும் ஒரே ஒரு பாகம் கூட டஸ்சால்ட் – ரிலையன்ஸ் கூட்டு தயாரிப்பு கிடையாது எனவும், ஒப்பந்தத்தில் உள்ள 36 ரபேல் போர் விமானங்களின் 100 சதவிகத பாகங்கள் அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ரபேல் விமான ஊழல் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அந்தக் கடிதத்தில் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

Related Posts