ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தை – ஆப்கானிஸ்தான் நிராகரிப்பு

ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் எனப்பட்ட  தற்போதைய  ரஷியா படையெடுத்ததற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்டதுதான் தலிபான் அமைப்பாகும்.  90-ம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு  அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வந்தது. மேலும் தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா மாறியது. அப்போது முதல் ஆப்கானிஸ்தானின் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 16 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் நாள்தோறும் பாதுகாப்பு படையினருடன் மோதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை செய்யத் தயார் என ரஷியா அறிவித்த்து. மேலும், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தப்படும் எனவும் ரஷியா கூறியது. இதனை தலிபான்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு  நிராகரித்துள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் எனவும்,மூன்றாவது நாட்டின் தலையீடு தேவையில்லை எனவும் ரஷியாவிற்கு,  ஆப்கானிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Posts