ராகுல் காந்தி பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்வாரா என அருண் ஜெட்லி கேள்வி

நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயத்தில் உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடங்கி கிடந்ததாக அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ராகுல் காந்தி பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக ராகுல் காந்தி கூறும் புகாரில் உண்மையில்லை என நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கமளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிவு செய்ய 10 ஆண்டுகளாக தாமதம் செய்த காங்கிரஸ் அரசு, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொண்டதை ராகுல் ஏற்றுக் கொள்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2007ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது ரஃபேல் போர் விமானம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2015ல் பாஜக அரசு போட்ட ஒப்பந்தத்திற்கும் இடையிலான 8 ஆண்டு காலத்தில் ரூபாய் மதிப்பு மற்றும் யூரோ மதிப்பு இடையிலான வேறுபாடு அதிகரித்திருப்பதை ராகுல் காந்தி உணர்ந்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஜெட்லி, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ராகுலின் வாதங்கள் அனைத்தும் குழந்தைத் தனமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக தேர்தலின் போது ஒரு ரஃபேல் போர் விமானம் 700 கோடி ரூபாய்க்கு வாங்க காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறிய ராகுல், பின்னர் அதனை 520 கோடி ரூபாய் என்றும், 526 கோடி ரூபாய் என்றும், 540 கோடி ரூபாய் என்றும் 7 இடங்களில் 7 விதமான விலைகளை கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் ஆட்சியைவிட பாஜக ஆட்சியில் தான் ராணுவ தளவாடம், விமானங்கள் கொள்முதலுக்கான விலை குறைந்திருப்பதை ராகுல் மறுக்கிறார் எனக் குற்றம்சாட்டியுள்ள அருண் ஜெட்லி, 2007ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்ததைவிட பாஜக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 20 விழுக்காடு வரை ஆதரவு விலை கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அரசு செயல்பட்டதையும் ராகுல் மறுக்கிறார் என்று கூறியுள்ள அருண் ஜெட்லி, நாட்டின் பாதுகாப்பில் சமசரம் செய்துக் கொள்ளாத பாஜக அரசின் 36 ரஃபேல் போர் விமான கொள்முதல் விலை, 2007ஆம் ஆண்டு போடப்பட்ட விலையை விட குறைவே என சுட்டிக்காட்டியுள்ளார்.

அருண் ஜெட்லியின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் கொள்ளையை தேசிய கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி என கூறியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரஃபேல் பிரச்னைக்கு கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்து தீர்வு காண முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  பிரச்சனை, உங்கள் தலைவர் அவரது நண்பரை பாதுகாக்க உதவுகிறார் என்பதே என்றும்  இது  இடையூறை அளிக்கலாம் என்றும் கூறியுள்ள ராகுல், நன்றாக ஆராய்ந்து விட்டு  24 மணி நேரத்தில் பதில் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts