ராசிபுரத்தில்  குழந்தைகள் விற்பனை:  ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா கைது

குழந்தைகள் இல்லாத தம்பதிகள் சட்டப்படி தத்து எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக குழந்தைகளை தத்தெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஏழைக் குடும்பங்கள் மற்றும், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை வாங்கி விற்கும் தொழிலில்  பல இடைத்தரகர்கள் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆண் குழந்தையாகவும் வெண்மை நிறத்தில் 3 கிலோ எடையுடனும் இருந்தால் குறைந்தபட்சம் 4 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது. 70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாகவும், இதற்காக பெரிய கும்பலே செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டு காலம் செவிலியராக பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற அமுதா என்ற பெண்,தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வருவதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணிடம் குழந்தை இல்லாத தம்பதி பேசும் ஆடியோ என்று கூறப்படும் குரல்பதிவு ஒன்று தற்போது  வெளியாகியுள்ளது. 30ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பதாகவும் அதற்காகவே செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறுவதுஅதில் பதிவாகியுள்ளது. முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என குழந்தைகளின் விலை விவரத்தை கூறுவதும் அதில்பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, குழந்தை விற்பனை தொடர்பாக காவல்துறையிடம் நாமக்கல் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செவிலியர் அமுதாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts