ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்: 10 குழந்தைகள் விற்றதாக கைதான ஓட்டுநர் ஒப்புதல்

பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ராசிபுரம் அமுதவள்ளி தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில்  அனைத்து மகளிர் போலீசார், அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் செவிலியராக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும்,  வறுமையில் வாடும் பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து,  அமுதவள்ளி, கணவருடன் கைது செய்யப்பட்டார்.  இது குறித்து விசாரணை நடத்த  மருத்துவர்  ஒருவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வினை போலீசார் கைது செய்தனர்.. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,கொல்லிமலை பகுதியில் 10 குழந்தைகளை வாங்கி அமுதாவிடம் விற்றதாக ஓட்டுநர் முருகேசன் ஒப்புக் கொண்டார்.   குழந்தைகள் விற்பனை தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 

Related Posts