ராஜஸ்தானில் அமைச்சர்கள் பதவியேற்பு: ஆளுநர் கல்யாண்சிங்

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுக்கொண்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கல்யாண் சிங் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 99 இடங்களை காங்கிரசும், ஒரு இடத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் கைப்பற்றின. இதன் மூலம் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் கடந்த 17-ஆம் தேதி பதவியேற்றனர். அப்போது புதிய அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதனையடுத்து அமைச்சர்களை தேர்வு செய்வதற்காக அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர், கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11.30 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. காங்கிரசை சேர்ந்த 22சட்டமன்ற உறுப்பினர்களும்,, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர் சுபாஷ் கார்க்கும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற 23 பேரில் 17 பேர் முதன்முறை அமைச்சராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts