ராமநாதபுரத்தில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு: 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி

ஆசிய அளவில் நீளமான கடல் பாலங்களில் ஒன்றாக விளங்குவது பாம்பன். இது கடல் மீது அமைந்துள்ள அன்னை இந்திராகாந்தி சாலை பாலம் ஆகும். 2.34 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலத்தின் இரு புறங்களிலும் சுமார் 1,500 மீட்டர் இறங்கு தளமும் உள்ளது. இந்தச் சாலை பாலத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 3,ஆயிரம் பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி  நடைபெற்றது.

மனிதசங்கிலியின் போது வரும் தேர்தலில் வாக்காளர்கள் எவ்வித அச்சம் இன்றி வாக்களிப்பதற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்திய படி பாலத்தின் மீதும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்த படியும் மீனவர்கள் நின்றனர்.

கடல் மீது அமைந்துள்ள இந்தச் சாலைப் பாலத்தின் மீது நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது புக் ஆப் வேர்ல்ட் ரிக்கார்ட் என்ற அமைப்பின் மூலம்  சாதனை நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேஷ், கடற்படை துணை கமாண்டர் சிமோத் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Related Posts