ராம்ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல்

ராம்ஜெத்மலானி மறைந்தார் என்ற செய்தி, என் உச்சந்தலையில் விழுந்த பேரிடியாக, வேதனையால் துடிக்கின்றேன் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு நிகரான இன்னொரு வழக்கறிஞரை இந்தியாவில் அனுமானிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

1975 நெருக்கடி நிலை காலத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில், சர்வாதிகாரக் குரல் வளையைத் தன் வாதத்தால் முறித்து, நீதியை நிலைநாட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டெம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுப் பணிகளில் இருந்தபோதும், செப்டெம்பர் 14 இல் மும்பை சென்று, ராம் ஜெத்மலானிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதை பாசக் கடமையாகக் கொண்டு இருந்ததாக வைகோ கூறியுள்ளார். தன் சொந்த மகனைப் போல தன்னை நேசித்ததாகவும், இராசபாளையத்தில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ராஜா அஞ்சல் தலையை வெளியிட்டு விட்டு, கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்து, தனது தாயார் உணவு படைக்க உண்டு மகிழ்ந்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ராஜீவ் காந்தி துன்பியல் நிகழ்வில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள்தான், ஜெத்மலானியின் வாதம் என்று அவர் கூறியுள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று, சென்னைக்கு வந்து உயர்நீதிமன்றத்தில், மூவர் தூக்குக்குத் தடை ஆணை பெற்றுத் தந்தபோது, திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்னிலையில், வைகோவுக்கு நன்றி சொல்லுங்கள் என்று அவர் பிரகடனம் செய்ததை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீசை மாதையன் உள்ளிட்ட ஐவரின் வழக்கிற்காக, கொளத்தூர் மணியும், ஹென்றி திபேனும் அணுகியபோது. தனது வேண்டுகோளை ஏற்று, கட்டணம் எதுவும் பெறாமலேயே, உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஐவர் தூக்குத் தண்டனையை அவர் ரத்து செய்ய வைத்ததை வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். உயிரோடு இருக்கும் வரை வைகோவுக்காக, ஈழத்தமிழர்களைக் காக்க அனைத்தையும் செய்வேன் என்று ஜெத்மலானி சபதம் பூண்டதை குறிப்பிட்டுள்ள அவர், மூவர் தூக்குத்தண்டனையை ரத்து செய்ததற்காக, அவருக்கு சென்னையில், ம.தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பில், மிகப்பெரிய நன்றி பாராட்டு விழா நடத்தியபோது மிகவும் மனம் நெகிழ்ந்து பேசியதாக கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, அவராகவே வந்து, ஐந்து இடங்களில் தனக்காகப் பிரச்சாரம்  செய்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஓராண்டு காலமாகவே அவருக்கு உடல்நலம் இல்லை என்பதால், ஒவ்வொரு முறையும் அவரது இல்லம் சென்று, குறைந்தது, இரண்டு மணி நேரமாவது அவருடன் உரையாடி விட்டு வந்ததாக அவர் கூறியுள்ளார். மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தெரிவு பெற்று டெல்லி சென்று அவரைச் சந்தித்தபோது, படுத்த படுக்கையாக இருந்தாலும், தனது முகத்தை வருடிக்கொடுத்து வாழ்த்தியதாக வைகோ குறிப்பிட்டுள்ளார். தங்களிடம் பேசியதுதான், கடைசிப் பேச்சு, அதன்பிறகு பேச்சு நின்று விட்டது என்றபோது தனது இதயம் கலங்கித் துடித்தது என்று அவர் கூறியுள்ளார். இரண்டு வார காலம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது, பயணிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், எந்த முகம் தன்னைப் பார்க்கும்போதெல்லாம் பரவசப்பட்டதோ, எந்தக் கரங்கள் தன்னை அன்போடு பற்றிக் கொண்டதோ, அந்த முகத்தைக் கடைசியாக பார்ப்பதற்கு இயலாத, இப்படி ஒரு துன்பமா? என தான் மிகவும் நொறுங்கிப் போய்விட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரை மதித்து நேசிக்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஜனநாயக உரிமைக் காவலர்கள் அனைவருக்கும், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அந்த மாமனிதரின் நினைவுகள், தனது இதயத்தில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts