ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டுக்கு பெரிய இழப்புகள் மட்டுமே – ப.சிதம்பரம்

மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டுக்கு பெரிய இழப்புகள் மட்டுமே ஏற்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு அப்போது புழக்கத்தில் இருந்த 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 99புள்ளி3 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ப.சிதம்பரம் சுட்டுரைப் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும் எனவும், நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் எதுவும் வங்கிக் கணக்குக்கு திரும்பாது எனவும் மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், மத்திய அரசின் கூற்றை பொய்யாக்கும் வகையில் புழக்கத்தில் விடப்பட்ட மொத்த பணத்தில், 15புள்ளி 31 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்து விட்டதாகவும், சுமார்10 ஆயிரம் கோடி அளவிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்பவரவில்லை எனவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் மத்திய அரசு சாதித்தது என்ன என்று வினவியுள்ள ப.சிதம்பரம், இந்தியப் பொருளாதர வளா்ச்சி 1 புள்ளி 5 சதவீதம் பின்தங்கியதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். 15 கோடி தினக்கூலிகளும்,சாமானிய மக்களும் சில வாரங்கள் தங்கள் வேலைகளை இழந்தனா் எனவும், நூற்றுக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு சில லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் தடைபட்டதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் நாட்டுக்கு கிடைத்தவை என கூறியுள்ள ப.சிதம்பரம், வங்கிக்கு திரும்பி வரவில்லை என்று கூறப்படும் 10 ஆயிரம் கோடி ரூபாய் கூடநேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Related Posts