ரெட் அலர்ட் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்

ரெட் அலர்ட் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

         சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்தியகோபால், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு 7ம் தேதி ரெட் அலர்ட் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற  எச்சரிக்கை கொடுக்கபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.  செயற் பொறியாளார்கள் தலைமையில் பொறியாளர்கள் அணையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 89 அணைகளில் 15 பெரிய அணைகள் நிரம்பி உள்ளதாகவும் அவர் கூறினார். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அணைக்கு நீர்வரத்து, இருப்பு தகவலை தெரிவிக்க அணை பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அணை நிரம்பினால் பாதுகாப்பு கருதி செயற் பொறியாளர்களே நீரை திறந்துவிடலாம் எனவும், நீர் வரத்து, வெளியேற்றம் குறித்து தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சத்ய கோபால், நீர் நிலை உடைப்புகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஏற்கெனவே மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கடலோர மாவட்டங்களில் 60 முதல் 80 பேரும், இதர மாவட்டங்களில் 45 முதல் 50 பேரும் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேவையெனில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்து கொள்ளப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்தார்.

         இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கனமழையால்,பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் நாளையும், நாளை மறுநாளும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்

Related Posts