ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி தண்டனை பெற்ற ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

         இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து இரண்டு ரோஹிங்கியா அகதிகள் சார்பில் பொநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, முதற்கட்டமாக 7 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். அசாமின் சில்சார் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேரும் மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

         இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், 7 அகதிகள் நாடு கடத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ரோஹிங்கியா அகதிகளை தங்கள் நாட்டு குடிமக்கள் என மியான்மர் அரசு கூறியிருப்பதாகவும், தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

         இதையடுத்து மத்திய அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அத்துடன், பிரசாந்த் பூஷனின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்தியாவில் இருந்து மியான்மர் நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அகதிகளை நாடு கடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts