கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனு : உச்சநீதிமன்றம் மறுப்பு

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள  கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள்  15 நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தனர்.  இதில் ராமலிங்கரெட்டி,  ஆனந்த்சிங்,  ரோஷன் பெய்க்,  சுதாகர் ஆகியோர் தவிர மற்ற  12  பேரும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். மேலும், அமைச்சராக இருந்து வந்த  சுயேச்சை உறுப்பினர்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடக்கோரி, சுயேச்சை உறுப்பினர்கள் சுதாகர், நாகேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் மனுவை விசாரிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் கூறினர்.

Related Posts