லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும்

தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி : மே-02

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லையில் தந்தையின் மதுப்பழக்கத்தால் அவரது மகன் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.

தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிற்குள்ளேயே நீட் தேர்வை எழுத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் கடந்த 29 ஆம் தேதி பிரச்சார பயணத்தைத் தொடங்கினார். கடந்த 30 ஆம் தேதி ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ, இன்று பட்டுக்கோட்டை நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் மதுக்கூர் ஒன்றியங்களில் பரப்புரை செய்கிறார். இன்று இரவு பட்டுக்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு, உரையாற்றுகிறார்.

Related Posts