லெபனான் பிரதமர் சாட் அல் ஹரிரி நாடு திரும்புகிறார்!

லெபனான் பிரதமர் சாட் அல் ஹரிரி கடந்த 3-ம் தேதி திடீரென சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக  மறுநாள் தொலைக்காட்சியில் அறிவித்தார். ஆனால், தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவருக்கு நெருக்கமான லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் அவரது ராஜினாமாவை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. இதற்கிடையே ஹரிரிக்கு பிரான்ஸ் நாடு அழைப்பு விடுத்துள்ளது.

லெபனான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹரிரியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முயற்சித்துவரும் நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட சாட் ஹரிரி இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வந்தடைந்தார். லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

பாரிசில் உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள ஹரிரி, அங்கிருந்தவாறு லெபனான் அதிபர் மைக்கேல் அவுன்-ஐ தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார். வரும் 22-ம் தேதி நடைபெறும் லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நிச்சயமாக நாடு திரும்புவேன் என அவர் அதிபரிடம் உறுதி அளித்துள்ளார்.

Related Posts