லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும்

ஆர்பிட்டர் உதவியால் லேண்டர் இருக்கும் இடம் உறுதியாக கண்டுபிடிக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் உறுதிபடக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள அவர்,  லேண்டர் கருவியுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்த விஞ்ஞானிகள் அனைவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். அடுத்த 14 நாட்களுக்குள் லேண்டரின் தொடர்பை பெற அனைத்து வித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும் எனவும், அதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டால் நிலவில் இருந்து தேவையான தகவல்களை ஆய்வுக்கு பெற முடியும் என்றார் அவர். அறிவியல் என்பது சோதனை என்பதால் பின்னடைவை கண்டு மனம் தளரவேண்டாம் என்று பிரதமர் ஊக்கப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும் ஆர்பிட்டர் மிகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும், நிலவின் தென்துருவம் பற்றிய புதிய தகவல்கள் ஆர்பிட்டர் மூலம் கிடைக்கும் எனவும் சிவன் தெரிவித்துள்ளார்.  உலகில் இதுவரை எந்த நாட்டுக்கும் நிலவின் தென் துருவ பகுதிகள் பற்றிய ஆய்வு தகவல்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அவர், முதன்முதலாக ஆர்பிட்டர் மூலம் அது நமக்கு கிடைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். உலகுக்கே அது புதிய தகவல்களை தருவதாக அமையும் என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஆர்பிட்டரில் தேவைக்கு அதிகமாகவே எரிபொருட்கள் உள்ளதால், அதை சுமார் ஏழரை ஆண்டுகள் ஆய்வு பணிக்கு பயன்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் நிலவின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து தகவல்களை பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்து இருப்பதால், சந்திரயான்-2 திட்டம் முழுமையான வெற்றியை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இறுதியில் கார்டோ செயற்கைகோள் ஏவப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts