வங்கக் கடலில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை 

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், பின்னர் புயலாக மாறி  30-ம் தேதி தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.  இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான பகுதியாக மாறியுள்ளது.  இது புயலாக மாறினால்  வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக இன்றும் நாளையும் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே,  கனமழை தொடர்பாக ஏப்ரல் 30, மே 1 ஆகிய தேதிகளில்   தமிழகத்துக்கு  ரெட் அலர்ட்  கொடுத்துள்ள  இந்திய வானிலை மையம்  இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்து இருக்கும்  ரெட் அலர்ட் என்பது, கனமழைக்கான எச்சரிக்கை மட்டும்தான் எனவும், அது மாறுபாட்டிற்கு உட்பட்டது எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சனிக்கிழமையன்று உருவாக உள்ள புயல் சின்னத்திற்கு, ஃபானி என பெயர் சூட்டப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது,.

Related Posts