வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்

வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 250 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இயல்பான மழையளவில் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக கூறினார். மழை வெள்ளத்துக்கு 4 ஆயிரத்து 399 பகுதிகள் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது எனவும்,  இதில் சென்னையில் மட்டும் 250 இடங்கள் பாதிக்கும் பகுதிகளாக உள்ளன எனவும் அவர் தெரிவித்தார். இந்த பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், 8 ஆயிரத்து 417 நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரத்து534 பாலங்களின் அடைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் குடிமராமத்து மற்றும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களின் மூலம் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்தார்.

Related Posts