வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம்,  மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள், சுகாதாரம், பொதுப்பணி, சாலை, மெட்ரோ நிர்வாகம், முப்படை,  வானிலை ஆய்வு மையம் உட்பட 40 துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள அபாயத்தை தடுப்பது, சாலைகள் மற்றும் மழைநீர்க் கால்வாய்களை சீரமைத்தல், மருத்துவ உதவிகள், தொலைத் தொடர்பு வசதிகள், மீட்பு நடவடிக்கைகளில் ராணுவம், வானிலை தகவல்கள் என அனைத்து துறைகளின் ஆயத்த  நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வட கிழக்கு பருவமழையின் போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவித்தார். மழை நீர் வடிகால் பணிகள் முழு விச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் இன்னும் 15 நாட்களில் அனைத்து பணிகளும் முடிவடையும் எனறார். பாதுகாப்பு முகாம்கள்,அத்தியாவசிய பொருட்கள், மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய ஆணையர் கார்த்திகேயன், பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது பெரு மழைக்கான வானிலை எச்சரிக்கை எதுவும் விடுக்கபடவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், எச்சரிக்கை இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Related Posts