வடமாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பலி

 

 

வடமாநிலங்களில் தலித் அமைப்பினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏப்ரல்-02

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டமான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் சில திருத்தங்களை செய்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தலித் அமைப்புகள், நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. வட மாநிலங்களில் இந்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

பல்வேறு தலித் அமைப்புக்கள் நடத்தும் இந்த போராட்டம் காரணமாக பஸ் சேவை, மொபைல் இன்டர்நெட் சேவைகளை முடக்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்த போதிலும் பல பகுதிகளில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜெய்பூர் – டில்லி இடையேயான ரயில்களையும் போராட்டக்காரர்கள் மறித்துள்ளனர்.
ஜலந்தர், பக்வாரா உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஜெய்ப்பூரில் நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் கட்டை, கம்புகளுடன் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் உள்ளிட்ட சேவைகளும் முடங்கி உள்ளன. டில்லியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த மோதலில் 5 பேர் பலியாகினர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கலவரம் நடைபெற்றது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், முந்தைய நிலையே தொடர வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts