வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் : மே-05

ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு மாவட்டங்களில் கடந்த 2-ம் தேதி பலத்த இடியுடன் கனமழை பெய்தது. அதன் பின் அங்கு வீசிய புழுதி புயலின் காரணமாக சாலையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், மின் கம்பங்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தன. இதேபோல், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய வட மாநிலங்களிலும் புழுதிபுயல் தாக்கியது. இச்சம்பவங்களில்  120-க்கும்  மேற்பட்டோர்  பரிதாபமாக உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயலால் சேதமடைந்த பகுதிகளில் தற்போது, மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேற்குவங்கம், ஒடிசா, பீகார், மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மீண்டும் புழுதி புயல் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, வடமாநிலங்களில் புழுதி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts