வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவான மூன்று புலி குட்டிகள் 

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும் நகுலா என்ற ஆண் புலிக்கும், கடந்த 2019 ஜனவரி மாதம் 9-ஆம் தேதி 3 குட்டிகள் பிறந்தன. இதுத்தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிறந்த 3 புலிக்குட்டிகளில் இரண்டு குட்டிகள் அடர் வரிகளைப் பெற்று, அதிக கருமை நிறத்தில் காணப்படுவதாகவும்,  கரும்புலிகள் மிகவும் அரியவகை புலிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது ஒரு தனி இனமோ அல்லது வேறு இனத்தை சார்ந்த்தோ அல்ல எனவும், பொதுவாக பாலூட்டிகளில், அகௌட் எனும் நிறமி ஜீன் மாற்றத்தால் வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பெண் குட்டி அதன் தாயையொத்து வெண்ணிறத்தில் உள்ளது எனவும், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்து மூன்று மாதமான 2 கருப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக்குட்டிகளை அதன் தாயான நம்ருதாவுடன் பார்வையாளர்கள் காண்பதற்கு வசதியாக  தனி விலங்கு கூடத் திடலில் விடப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இக்குட்டிகளுடன் சேர்த்து பூங்காவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts