வன்முறையை தூண்டும் விதமாக பேசி, மோதல்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக நினைக்கிறது

வன்முறையை தூண்டும் விதமாக பேசி, மோதல்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக நினைப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளதாகவும், மின்வெட்டு இல்லை என கூறினாலும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் மூலம் மின்வெட்டு இருப்பது தெளிவாகயுள்ளது எனவும் கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 105 டாலராக இருந்த போது, பெட்ரோல் விலை 49 ரூபாய் 60 காசுகளாக இருந்ததை சுட்டிகாட்டிய அவர், தற்போது கச்சா எண்ணெய் விலை 72 டாலராக உள்ள நிலையில் பெட்ரோல் விலை 85 ரூபாவை தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசு 4 ஆண்டுகளில் வரி என்ற பெயரில் 23 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளதாகவும், பெட்ரோலின் அடக்கவில்லை 28 ரூபாய் 35 காசுகள் தவிர மீதியுள்ள தொகை அனைத்தும் வரியாக வசூலிக்கப்படுவதாகவும் கூறினார்.  மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் பயிர்கள் வாடி கருகும் நிலையில் உள்ளதாகவும், இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக தொடாந்து பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு பயப்படுவதாக கூறிய முத்தரசன், எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Related Posts