வருமான வரிச்சோதனை  மிரட்டலுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது: மு.க.ஸ்டாலின் 

தூத்துக்குடியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் எந்தவித ஆவணமும் கிடைக்காததால் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் நேற்று பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுங்கட்சியினர் கோடிகோடியாய் பணம் கொடுத்தாலும் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டர்கள் என்றார். மத்தியில் உள்ள ஆட்சியையும் மாநிலத்தில் உள்ள ஆட்சியையும் அகற்ற மக்கள் உறுதி பூண்டுள்ளதாகவும், . எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காகவே வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வருமானவரிச்சோதனை என்ற மிரட்டலுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது என்று தெரிவித்த ஸ்டாலின்,  நியாயமாக பார்த்தால் தேனி மக்களவைத் தொகுதி தேர்தலை தான் ரத்து செய்ய வேண்டும் என்றார். வேலூர் தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக சட்ட வல்லுனர்களிடம் கலந்தாலோசித்து திமுக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.  பழம் வாங்கியதற்காக பணம் கொடுப்பதாக இருந்தால் முதல்வர் வெளிப்படையாக கொடுத்திருக்கலாம் எனவும்  பழத்துக்காக முதல்வர் பணத்தை குனிந்து கொண்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். .

Related Posts