வாக்குப்பதிவு மையத்தின் 100மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும், தட்டான்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அதே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. பிரசாரம் ஓய்ந்தபின் வெளியூரைச் சேர்ந்தவர்கள்உடனடியாக தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்குப்பதிவு மையத்தின் 100மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை என அவர் விளக்கம் அளித்தார். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு குறிப்பிட்டார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில், நாளை மாலை 6மணி முதல் 18ம் தேதி வாக்குப்பதிவு முடிவு வரை பரப்புரை செய்யக்கூடாது எனற சத்யபிரதா சாகு, தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை, 998கிலோ தங்கம் 642கிலோ வெள்ளி, மற்றும் பரிசு பொருட்கள் என 286 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பிடிபட்டுள்ளதாக குறிப்பிட்டார். பறக்கும் படை மூலம் 132 கோடியே 91 லட்சம் ரூபாயும், வருமானவரித்துறை மூலம் 55 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதால் 65 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். சென்னைசட்டமன்ற உறுப்பினர்  விடுதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து தற்போது வரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்திற்குவரவில்லை எனவும், , தேர்தல் விதிமீறல் தொடர்பாக 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Related Posts