வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம்:   தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை சென்னை வருகை

மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்  தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவும் வரும் 19-இல் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 23-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 45-க்கும் அதிகமான வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்குகளில், 50 சதவீத வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச் சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்திலும் இதுபோன்ற முறையில் முதன்முதலாக வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. புதிய முறையில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ள சூழ்நிலையில், அதுகுறித்த ஆலோசனைகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட உள்ளன.
தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வாக்கு எண்ணிக்கை குறித்த ஆலோசனைகளை அளிக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் நாளை சென்னை வரவுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழகத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசிக்கவுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கைத் தொடர்பாக, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாதிரி பயிற்சியும் அளிக்கப்பட இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts