வாஜ்பாயின் புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும்-வைகோ

வாஜ்பாயின் புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும் – வைகோ

                முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் நேற்று காலமானார். டெல்லியில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலரஞ்சலி செலுத்தினார்.

அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாற்பது ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி, தகுதிக்கு மீறிய அன்பை அவரிடமிருந்து பெற்றதாகவும், அவருடைய அன்பை பெற்றதன் விளைவாக 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க அவர் முன் வந்த போது அதை தனது சகாக்களுக்கு கொடுக்கும்படி தாம் கூறியதை,அனைவரிடமும் சொல்லி வாஜ்பாய் ஆனந்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

                நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மத்திய அரசு தனியார் மயமாக்க முடிவெடுத்த பின்னர், எளியேனின் வேண்டுகோளை ஏற்று, அந்த முடிவை இரத்து செய்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

                தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துக்களைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் வாஜ்பாய் என அவர் புகழாரம் சூட்டினார்.

                சகாக்களுடன் பொடா கைதியாக சிறையில் இருந்தபோது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்பபடி குற்றம் ஆகாது என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலை உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு நடவடிக்கை எடுத்தவர் வாஜ்பாய் என்று வைகோ தெரிவித்தார். கடந்த எட்டாண்டு காலமாக அவர் நினைவு குறைந்து படுத்த படுக்கையானபின்,  டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது படுக்கையின் அருகில் நின்று, கரம்கூப்பி வணங்கிவிட்டு பொங்கும் விழிநீரைத் துடைத்துக்கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

                வைகோவை வளர்ப்பு மகனாகவே கருதுகிறேன்” என்று கூறும் அளவுக்கு அம்மாமனிதரின் உள்ளத்தில் ஒரு இடம் கிடைத்தது தனது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும் என வைகோ உருக்கத்துடன் தெரிவித்தார்.

                1999 ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் “இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் இந்திய அரசு உதவி செய்யாது, ஆயுதங்களை சிங்கள அரசுக்கு ஒருபோதும் விற்பனை செய்யாது” என்று கொள்கை முடிவை வாஜ்பாய் அறிவித்தார் என்று வைகோ கூறினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கத்திலிருந்து வந்திருந்தாலும் கூட அவர் தனது ஆட்சி காலத்தில் மதச்சார்பற்றத் தன்மையை காக்கும் மாபெரும் தலைவராக திகழ்ந்தார் எனவும் அவரது புகழ் இந்திய அரசியலில் என்றென்றும் நிலைத்து நிற்கும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

Related Posts