விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி செய்யும்: புதின்

விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவும் என்று அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான ரஷியாவுடன் உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடைபெற்றுவருகிறது. இதன்படி டெல்லியில் இந்தியா – ரஷியா பங்கேற்ற 19-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று மாலை இந்தியா வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். இருநாட்டு தலைவர்களும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது எதிரிநாடுகளின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவில் வான்வெளியில் தாக்கி அழிக்கும் வல்லமையுடைய எஸ்- 400 எனும் ஏவுகணைகள் 5 வாங்குவதற்கும் மற்றும் போர் கப்பல்கள் வாங்கவும், சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவும் பங்கு வகிப்பதாகவும்,இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறினார். மேலும், சர்வதேச அமைப்புகளான சார்க் மாநாடு, பிரிக்ஸ் மாநாடு போன்றவற்றின் மூலம் ரஷ்யாவும்,இந்தியாவும் சமபலன்களை பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் இருநாடுகளும் ஒற்றுமையை பேண முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார கூட்டத்துக்கு முக்கிய விருந்தினராக பிரதமர் மோடியை மீண்டும் அழைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். மேலும், இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு ரஷ்யா உதவி செய்யும் என்று அதிபர் புதின் உறுதி அளித்தார்.

 

Related Posts