விருப்பப் பாடமாக பகவத் கீதை அறிமுகப்படுத்தியதை கண்டித்து 1-ந் தேதி போராட்டம் : திமுக மாணவரணி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடமாக பகவத் கீதை அறிமுகப்படுத்தியதை கண்டித்து வரும் 1-ந் தேதி போராட்டம் நடைபெறும் என  திமுக மாணவரணி அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் AICTE வெளியிட்ட வழிகாட்டுதல்படி, நடப்பாண்டு இன்ஜினியரிங் சேர்ந்த மாணவர்களுக்கு பாடத்திட்டம் சாராத 32 பாடங்களில் 3 பாடங்களை விருப்பப்பாடமாக தேர்வு செய்து 3, 4, மற்றும் 5வது செமஸ்டரில் படிக்க வேண்டும் கூறியிருந்தது.

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கிண்டி, அழகப்பா காலேஜ் ஆப் இன்ஜினியரிங், குரோம்பேட்டையிலுள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி  உள்ளிட்ட 4 கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பாடப்பிரிவு வாரியாக விருப்ப பாடங்களை தேர்வு செய்தனர். அதில் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) மாணவர்கள் மொத்தமுள்ள 12 பாடங்களில் தத்துவவியல் பாடத்தை தேர்வு செய்தனர். தத்துவியல் பாடத்தின் 5வது யூனிட்டில் ‘‘அறிவே ஆற்றல்’’ என்ற தலைப்பில், ஆற்றலை உணர்வது தொடர்பாக கீதையில் கூறப்பட்டுள்ளவை, மனதை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அர்ஜூனனுக்கு கிருஷ்ணரின் உபதேசங்கள் ஆகியவை பாடமாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் திடீரென்று பகவத்கீதையை பாடமாக கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 1-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் அருகே திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts