விரைவில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் : முதலமைச்சர் பழனிசாமி

ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில், பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், மக்களிடம் இருந்து மனுக்களை நேரிடையாகப் பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது, 6 கோடியே 84 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 1,259 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைவாசலில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்

Related Posts