விரைவு மின்சார ரயில் இயக்கக்கோரி பயணிகள் மறியல் போராட்டம்

விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்கக்கோரி தாம்பரம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை : மே-05

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தாம்பரம், பல்லாவரம், கிண்டி போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த விரைவு மின்சார ரயில்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண மின்சார ரயில்களாக இயக்குவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரத்தில், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு மின்சார ரயிலை சாதாரண ரயிலாக இயக்குவதால் தாங்கள் அலுவலகம் செல்ல தாமதமாவதாக கூறி, 2 ரயில்களை அவர்கள் சிறை பிடித்தனர். சுமார் 1000 பேர் தண்டவாளத்தை மறித்து போராட்டம் நடத்தியதால் தாம்பரம் – கடற்கரை இடையிலான மார்க்கத்தில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த ரயில்வே துறை உயர்அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து 3 மணி நேரத்திற்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு – கடற்கரை இடையே மின்சார ரயில் போக்குவரத்து சீரானது.

Related Posts