விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் தலைவர்கள் வாக்களிப்பு

6-வது கட்ட மக்களவைத் தேர்தலில், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், அரியானா மற்றும் டெல்லி ஆகிய 7மாநிலங்களில் உள்ள  59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி வெறுப்புணர்வை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ததாகவும், தாங்கள் அன்பை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ததாகவும் கூறினார். அன்பு தான் வெல்லும் என்று நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்

முன்னாள் குடியரசு துணை தலைவர் அமீது அன்சாரி, வடகிழக்கு டெல்லி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீக்சித் ஆகியோரும் டெல்லியில் வாக்களித்தனர். கிழக்கு டெல்லி தொகுதியின் பாஜக வேட்பாளரான கவுதம் காம்பீர், பழைய ராஜிந்தர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில், பாஜக வேட்பாளர் மேனகா காந்தி – எதிர்க்கட்சி வேட்பாளர் சோனு சிங் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. சோனு சிங்கின் ஆட்கள், வாக்காளர்களை மிரட்டுவதாக மேனகா காந்தி குற்றம்சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் கிரிக்கெட் வீர்ர்  கபில் தேவ், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் டெல்லியில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது கணவருடன்  வாக்களித்தார். டெல்லியில் 111 வயதுடைய மிக முதிர்ந்த வாக்காளரான பச்சன் சிங் காரில் வந்து வாக்கு செலுத்தினார்.

 

 

Related Posts