விவசாயிகளின் பேரணி கிசான் காட் பகுதியில் இன்று காலை நிறைவடைந்தது

ஹரித்வாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விவசாயிகளின் பேரணி கிசான் காட் பகுதியில் இன்று காலை நிறைவடைந்தது.

            வேளாண் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்,  விவசாய கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 60 வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் 10 ஆண்டுகள் கடந்துவிட்ட பழைய டிராக்டர்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உத்தரகாண்டின் ஹரித்துவார் நகரில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்கள் மற்றும் டிராலியில் விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். பேரணியை உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி எல்லைகளில் தடுத்து நிறுத்திய போலீசார் முன்னேற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர்.  இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், தடுத்து நிறுத்தப்பட்ட விவசாயிகளை நள்ளிரவில் டெல்லிக்கு செல்ல போலீசார் அனுமதி வழங்கினர்.  இதனை அடுத்து அவர்கள் கிசான் காட் பகுதியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி, கிசான் காட் பகுதியில் இன்று காலை நிறைவடைந்தது.

Related Posts