விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்துக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ படத்துக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரும்புத்திரை’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தில் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் இருப்பதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் தத்தியாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர், உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், ‘ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்படும் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் போல் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, அவற்றை நீக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. ‘மேற்கண்ட காட்சிகளுடன் படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் அடையாள அட்டை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும். இதனால், மத்திய அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடும் அபாயம் ஏற்படும்’ என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. 

ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், ‘தணிக்கைக்குழுவிடம் சான்றிதழ் பெற்று வெளியாக உள்ள இந்தப் படத்தை, படம் வெளிவரும் முன்னரே மனுதாரர் குறிப்பிடும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதனால், திட்டமிட்டபடி வரும் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாக இருக்கிறது.

Related Posts