வெடிகுண்டின் பகுதிகளை அரசு வெடிபொருள் குடோனுக்கு அனுப்ப செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவுரை

காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதியில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டின் பகுதிகளை அரசு வெடிபொருள் குடோனுக்கு அனுப்ப செங்கல்பட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்போரூரை அடுத்த மானாமதியைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் ஞாயிற்றுக்கிழமை அன்று கெங்கையம்மன் கோவில் குளத்தின் அருகே கிடந்த ஒரு பொருளை கண்டெடுத்தனர். அதை திறக்க முடியாததால் கீழே  வீசி உடைக்க முயன்ற போது பலத்த சத்தத்துடன் அது வெடித்தது. இதில் 6 இளைஞர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, குளத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, ஏற்கெனவே வெடித்ததைப் போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது.

அது ராணுவ ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளின் ஃபியூஜ் என்ற பகுதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப்பகுதியில் இரும்புக்கடை வைத்திருக்கும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதனிடையே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டின் பகுதியை அருகே உள்ள ஏரியில் ஆழமாக தோண்டி வைத்து செயல் இழக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், செங்கல்பட்டு நீதிமன்றம் இதற்கு அனுமதி மறுத்ததுடன், அரசு வெடிபொருள் குடோனுக்கு அனுப்புமாறு கூறிவிட்டது.

Related Posts