வெனிசுலாவில்  7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

     தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில்  7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

                தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை வெனிசுலா மற்றும் கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அலுவலகம் மற்றும்  வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.

  இதேபோல், ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களில்  ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுமார் 15 முதல் 30 நொடிகள் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

Related Posts