வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

 

தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில்பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக வெயில் சுட்டெரித்தாலும், ஒரு சில பகுதிகளில் கோடை வெப்பத்தத்தைத் தணிக்கும் வகையில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிக பட்ச அளவு வெயில் கொளுத்தி வந்த திருத்தணியில், ஒரு மணிநேரம் பெய்த  கனமழையால் கடும் வெப்பம் சற்றே தணிந்தது.

கோவை மாநகரிலும், புறநகர் பகுதியிலும் திடீரென சூறாவளி மற்றும் புழுதிக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால், விவசாயிகள் ஆறுதலடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறைப் பகுதியில் முதலில் லேசாகத் தொடங்கிய மழை பின்னர் ஆங்காங்கே வலுவடைந்தது. இதனால், வெப்பம் தணிந்தது மட்டுமின்றி, நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரம்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கோடையின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேப்பனப்பள்ளி, சூளகிரி, மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

கடும் வெயில் வாட்டியெடுத்த தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், வெயிலில் இருந்து சற்றே விடுதலை கிடைத்ததாக மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Posts