சிறப்பு கட்டுரை

வெற்றியை முடிவு செய்துவிட்டு, தேர்தல் தேதி அறிவிப்பா?

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் ஜுரம் பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல், அதனுடன் தமிழகத்தில் நடந்து முடிந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அதன்பிறகு நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அதற்குள்ளாகவே தற்போது இந்தியாவையே உச்சகட்ட பதற்றத்திற்கு கொண்டுச் சென்றது மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல். இப்போது மீண்டும் தேர்தல் ஜுரம் தமிழகத்தை மையமிட்டுள்ளது. இந்த முறை அது உள்ளாட்சித் தேர்தல் வடிவில் வந்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் 2016 ஆம் ஆண்டே நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இன்று வரை நடைபெறாமல் உள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு சாதக, பாதகங்களுக்கு வழிவகுத்திருந்திருக்கலாம். ஆனால் தேர்தல் இன்னும் நடைபெறாமல் உள்ளது பொதுமக்களுக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றதுமே, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. ஆனால் வேட்புமனுத் தாக்கல்வரை சென்ற நேரத்தில், பெண்களுக்கான இடஒதுக்கீடு வரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது. பின்னர் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. முக்கியமாக ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரது மரணம், தமிழகத்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. அதிமுக சரியான தலைமை இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்க, திமுகவிற்கு ஸ்டாலின் தலைவராக பதவியேற்றார். இன்னொருபுறம் புதிது புதிதாக சில கட்சிகள் உருவெடுத்தன.

edappadi palanisamy and mk stalin க்கான பட முடிவு

அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி பூசல், வலிமையான தலைமையில்லாதது, பாஜகவின் ஆதிக்கம் போன்றவைகளால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டாம் என்ற எண்ணத்திலேயே இருந்து வந்தது தமிழக அரசு. இந்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து அரசு தரப்பில் எப்போது தேர்தல் நடத்தப்போகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது, “இதற்கு ஒவ்வெருமுறையும் பல காரணங்களைக் கூறி, ‘தேர்தலை இப்போது நடத்த முடியாது’ என அரசு பதிலளித்தது. முக்கியமாக வார்டு வரையறை, பெண்களுக்கான இடஒதுக்கீடு போன்றவைகளையே காரணமாக கூறி வந்தது. அரசின் இந்த பதிலுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தும், அதிமுக அரசு எதற்கும் மசியவில்லை. முடிந்தவரை உள்ளாட்சித் தேர்தலை இழுத்தடிப்பதை தனியொரு வேலையாக தமிழக அரசு செயல்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு நேரடியாகவே அதிமுகவிற்கு உதவி வருவதாக அரசியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றதோடு, டிசம்பர் 13ஆம் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலில் உருவான திமுக – மதிமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக – பாஜக தலைமையிலான கூட்டணியை, தேனி தொகுதியை தவிர்த்து தமிழகம் முழுவதும் துவம்சம் செய்தது. மேலும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணியே முன்னணி வகித்தது. இதனால் அதிமுக அரசிற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தயக்கம் இருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்தது. இரண்டு தொகுதிகளுமே 2016 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவி, தற்போது கைப்பற்றியது. இதுவே சரியான சமயம் என உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக அரசு ஆயத்தமாகி வருகிறது. அதுவும் நகராட்சித் தலைவர், மேயர் போன்ற பதவிகளுக்கு நேரடித் தேர்தலுக்கு பதிலாக மறைமுகத் தேர்வு முறையையும் கொண்டு வந்துள்ளது. நேரடியாக மேயர் தேர்வு நடைபெற்றால் அது திமுகவுக்கே சாதகமானதாக அமையும் என்பதால், மறைமுகத் தேர்தலை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு அதிமுகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மறைமுகத் தேர்தல் நடந்தால் அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

anna arivalayam க்கான பட முடிவு

இப்படியான சூழ்நிலையில், திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக தொகுதி, வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் “தேர்தலை நிறுத்துவதற்காக வழக்கு தொடரவில்லை, மாறாக அதனை முறையாக நடத்த வேண்டும்” என்பதற்காகவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக கோரிக்கை வைத்துள்ளது. இதன்படி வரும் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதே திமுக, அதிமுக உட்பட அனைத்துக்கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அது அனைத்து கட்சிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமலின் மக்கள் நீதி மய்யம், உள்ளாட்சி தேர்தலை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதற்கு ஏற்பவாறு அடுக்கடுக்கான வியூகங்களை அவர்கள் செயல்படுத்த தொடங்கிவிட்டனர், அதே சமயம் தேவைப்பட்டால் கமலுடன் நானும் இணைவேன் என சமீபத்தில் ரஜினி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுக தலைமையிலான இரண்டு கூட்டணிகளிலும் உள்ள கட்சிகள் தேர்தல் சீட்களை பெறுவதில் முனைப்புக் காட்டி வருகின்றனர். அதிலும் இன்னும் முழுமையாக முடிவுகள் எட்டப்படவில்லை. முக்கியமாக அதிமுக கூட்டணியில் அதிகளவில் குழப்பம் நிலவி வருகிறது, பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் மேயர் பதவிகளை குறிவைத்து காய்கள் நகர்த்தி வருகின்றன. மொத்தமாக உள்ள 15 மேயர் சீட்களில் ஒன்றிரண்டு சீட்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதானல் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் களோபரம் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

election commission of tamilnadu க்கான பட முடிவு

இந்த நிலையில் யாரும் எதிர்பாரத வண்ணம் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார், அதன்படி, தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகள் என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால்,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக அரசோடு மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும். தேர்தலையே தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திமுக மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும். மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்” என்று விமர்சித்துள்ளார்.

அதிமுக அரசு ஏற்கனவே மறைமுகத்தேர்தலை அறிவித்துள்ளதால் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு, திமுகவிற்கு மேலும் பல சிக்கல்களை உருவாக்கும் என தேர்தல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இதன் பின்னரே மேயர் தேர்வு நடைபெறும் என்பதால், அது நேரடியாகவே குதிரை பேரத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்றும் அச்சப்படுகின்றனர். இதுமட்டுமின்றி தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா என்பது தவிர்க்க இயலாத சம்பிரதாயமாக மாறிவிட்டது. சொல்லப்போனால் அரசியல் கட்சிகள் தங்களது வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வருகின்றன. இதனைதான் அரசியல் ஆர்வலர்கள் பலர் “தேர்தல் நடத்துவதற்கு பதிலாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏலம் நடத்தி விடலாம்” என்று கடுமையாக சாடி வருகின்றனர். ஆனாலும், நேர்மையான தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் பலரின் நம்பிக்கை எந்தளவிற்கு உண்மையாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியால் அதிமுகவினர் நம்பிக்கையுடன் இருப்பது போன்று வெளியில் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கும் உள்ளுக்குள் உதறல் இருப்பதைதான் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளிகாட்டுவதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் திமுக தொடந்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது, இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் தேதியிலும், அது நடத்தப்படவிருக்கும் முறையிலும் மாற்றங்கள் நிகழலாம் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது!

Show More

Related News

Back to top button
Close