வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட நீட் மையங்களை மாற்ற முடியாது

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால், அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

டெல்லி : மே-03

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டது. சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என கடந்த 27 ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும் தங்களது உத்தரவை சுற்றறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, நேற்று மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தால் அங்கு சென்றுதான் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்தை மாற்ற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Posts