வேனில் கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 2 பேர் உயிரிழப்பு

செஞ்சி அருகே வேனில் கொண்டு சென்ற பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தீபாவளிக்காக பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரியில் இருந்து வேன் ஒன்று திருவண்ணாமலைக்குச் சென்று கொண்டிருந்தது. திண்டிவனம் – செஞ்சி சாலை அருகே வடவானூர் அருகே வேன் வந்தபோது, அதில் இருந்து புகை கிளம்பியது. உடனடியாக வேனை நிறுத்திவிட்டு டிரைவரும் கிளீனரும் ஏன் புகை வருகிறது என்று பார்த்தனர். அப்போது திடீரென்று பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதை கண்ட அந்த ஊர்க்காரர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றதாகத் தெரிகிறது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறியதில் 2 பேர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தனர். அவர்கள் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரிய வில்லை. பின்னர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts