வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்று  அவர் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.  தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது எனவும்,  நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லாததால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது எனவும்,  தேர்தல் ஆணைய முடிவுகளை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர். இதன்படி மாலை தீர்ப்பு அளித்த நீதிபதிகள், வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Posts