வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் மோசடி

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் நிறுவனம்  சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3 புள்ளி 83 லட்சம் லிட்டர் பால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1புள்ளி 33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 72 ஆயிரம் லிட்டர் பால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பாக்கெட் பாலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் லிட்டர் பால் பவுடராக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள பாலில் நெய் தயாரிக்கப்படுகிறது. இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னையில் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால் கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. இதுதொடர்பாக வேலூர் ஆவின் நிறுவன அதிகாரிகள் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ்,பாலாஜி, சேம் கிப்சன், மற்றும்  ஊழியர் அப்பாத்துரை ஆகிய 5 பேரை இடைநீக்கம் செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் 5 பேர் இடைநீக்கட் செய்யப்பட்டிருப்பது ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Posts