வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை: வைகோ கண்டனம் 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்திருப்பதாகவும்,  தேர்தலை தடை செய்ததற்கு தேர்தல் ஆணையம் முன்வைத்த காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.  வேலூர் தொகுதியில் வருமானவரித்துறை நடத்திய சோதனை, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் துரை.கதிர் ஆனந்த்-க்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை எனவும் அதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி தங்கியிருந்த இல்லத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,  திமுக வேட்பாளர்களை அபாண்டமாக களங்கப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு வருமான வரித்துறையை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக  கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று  ஆயிரம், 2ஆயிரம், 5ஆயிரம்  என்று அள்ளி வீசுவதைத் தடுக்க திராணியற்ற தேர்தல் ஆணையம் எடப்பாடி அரசின் காவல்துறையை ஏவி, எதிர்க்கட்சியினரை மிரட்டுவது அக்கிரமச் செயல் என அவர் சாடியுள்ளார்.

ஜனநாயக நடைமுறைகளை குழிதோண்டிப் புதைத்து வரும் மத்திய பாஜக அரசு, அரசியல் சாசன அமைப்புகள் அத்தனையையும் சீரழித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே செல்லரிக்கச் செய்யும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகால பாசிச பாஜக அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்,  மோடி அரசுக்கு அடிமை சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல் ஆணையம் கருவியாக செயல்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யாமல் இருப்பதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நோக்கம் தெளிவாக தெரிகிறது எனவும், . இந்தியா முழுவதிலும் எதிர்க்கட்சிகளை தேர்தல் களத்தில் முடக்குவதற்கு முனைந்துள்ள மோடி அரசின் பாசிச சர்வாதிகாரத்திற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பேராதரவோடு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும்,  தமிழக மக்கள் பா.ஜ.க.வின் பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்க தக்க தீர்ப்பை அளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்துக்குப் பச்சைத் துரோகம் இழைத்த மோடி அரசையும், அதற்குக் காவடி தூக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் தூக்கி எறிய தமிழக  மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Related Posts